Skip to main content

‘தாங்கிக் கொள்ள முடியவில்லை’ - 4 வயது மகனை கொன்ற கொடூரத் தாயின் கடிதம்

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
letter from mother who lost his lives 4-year-old son at goa incident

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத் (39). இவர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வெங்கட்ராமன் என்பவருடன் திருமணமாகி 4 வயதில் ஒரு மகன் இருந்தான். தம்பதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 6 ஆம் தேதி சுசானா சேத் தனது மகனுடன் கோவாவில் உள்ள பிரபலமான ஒரு தனியார் ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார். இதனையடுத்து, அவர் கடந்த 8 ஆம் தேதி காலை ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு வாடகை கார் மூலம் பெங்களூருக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், சுசானா சேத் இருந்த அறையை சுத்தம் செய்ய பராமரிப்பு ஊழியர் அறைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு, ரத்தக் கறைகள் படிந்த ஆடைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து ஓட்டல் நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார். 

இதில் சந்தேகமடைந்த ஓட்டல் நிர்வாகம், இந்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து ஓட்டலில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார், சுசானா சேத் பயணித்த வாடகை கார் ஓட்டுநரிடம் தொடர்புகொண்டு அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு காரை கொண்டு வருமாறு போலீசார் கூறியுள்ளனர். அதன்படி, கார் ஓட்டுநர் ஓட்டி வந்த காரை ஜமங்கலா போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரில் இருந்த சூட்கேசில் சுசானா சேத்தின் 4 வயது மகன் பிணமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுசானா சேத் தனது மகனைக் கொன்று உடலை சூட்கேசில் அடைத்து காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சுசானா சேத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

அந்த விசாரணையில், சுசானா சேத்துக்கும் அவரது கணவரான வெங்கட்ராமனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர்கள் இருவரும் விவாகரத்து வழங்கக் கோரி பெங்களூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன், தனது மகனிடம் பேச அனுமதி அளித்து இருந்தது. அதன்படி,  கடந்த 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வெங்கட்ராமன் தனது மகனிடம் பேச, சுசானா சேத்தின் செல்போனுக்கு வீடியோ காலில் அழைத்து பேசிய போது மகனிடம் போனை கொடுக்காமல் மறுத்துள்ளார். 

letter from mother who lost his lives 4-year-old son at goa incident

அப்போது, அவரது மகன் தனது தந்தையிடம் பேச வேண்டும் என்று கூறி அடம்பிடித்து அழுது கொண்டிருந்துள்ளான்.  இந்த நிலையில், கணவர் மீது இருந்த அதிருப்தியிலும், மகன் அவரிடம் பேச வேண்டும் என்று அடம் பிடித்ததாலும் கோபத்தின் உச்சியில் இருந்த சுசானா சேத், தனது மகனைக் கொல்ல திட்டமிட்டு தனது மகனுக்கு அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து கொடுத்து, அவன் மயங்கியதும் மூச்சைத் திணறடித்து கொலை செய்திருக்கிறார் என்று தெரியவந்தது.

இந்த நிலையில், தனது மகனை கொலை செய்துவிட்டு சுசானா சேத் தன் கண் மையால் எழுதியிருந்த கடித்ததை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசானா சேத் எழுதிய அந்த கடிதத்தில், ‘நீதிமன்றமும், ஒரு பக்கம் எனது கணவரும், மகனை தான் வைத்துக்கொள்ள முடியாமல் அழுத்தம் கொடுக்கின்றனர். இனிமேலும், இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் முன்னாள் கணவர் ஒரு வன்முறையாளர். தவறான பழக்கங்களை என் மகனுக்கு கற்பித்தார். ஒரு நாள் கூட அவரிடம் மகனை விடுவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை’ என்று எழுதியிருந்ததாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்