நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் இன்று (08/12/2021) பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்துள்ளார். இதனை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவியும், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரின் விமானியும், ராணுவ கேப்டனுமான வருண் 80% தீக்காயங்களுடன் வெலிங்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் (வயது 63) மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல் நாளை (08/12/2021) டெல்லி கொண்டு செல்லப்படவுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் பின்னணி குறித்து முழுமையாகப் பார்ப்போம்!
உத்தரகாண்ட் மாநிலம், பவுரி கர்வால் என்ற இடத்தில் 1958- ஆம் ஆண்டு மார்ச் 16- ஆம் தேதி அன்று பிறந்தவர் பிபின் ராவத். இவரின் குடும்பம் ராணுவ பாரம்பரியம் கொண்டது. சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வர்ட் பள்ளியில் ஆரம்ப கால படிப்பை முடித்தார். பின்னர், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் மேலாண்மை- கணினி அறிவியலில் பட்டப்படிப்பை முடித்தார்.
கடக்வஸ்லாவில் உள்ள தேசியப் பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து ராணுவ பயிற்சி பெற்றார். அதைத் தொடர்ந்து, கடந்த 1978- ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி நிலையத்தில் 11- வது கூர்க்கா ரைஃபிள்ஸ் பிரிவில் சேர்ந்தார். வடகிழக்கு எல்லைப் பகுதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்குகள், பாகிஸ்தான், சீன எல்லைகளில் பணியாற்றினார். காங்கோ நாட்டிற்கு சென்று சர்வதேச ராணுவத்தில் பணியாற்றி, அங்கு படைகளுக்கு தலைமைத் தாங்கினார்.
டேராடூனில் உள்ள ராணுவ பயிற்சி நிலையத்தில் ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி பொறுப்பை வகித்துள்ளார். ராணுவச் செயலர் பிரிவில் துணை ராணுவச் செயலாளர், கர்னல் அந்தஸ்தில் பணியாற்றியுள்ளார். கடந்த 2016- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதி அன்று நாட்டின் 26- ஆவது ராணுவ தளபதி பொறுப்புக்கு வந்தார். பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப்பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் ஃபோர்ட்லீவொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பங்கெடுத்தவர். பிபின் ராவத் நாட்டின் முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக கடந்த 2020- ஆம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதி அன்று பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.