நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து வந்ததால், இந்த இரு அவைகளிலும் எந்த ஒரு விவாதமும் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து, இதுவரை மொத்தமாக இந்த கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்திருந்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற வரலாற்றிலேயே இவ்வளவு எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை. இதுவே முதல்முறை ஆகும்.
தொடர்ந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து விஜய் சவுக்கு வரை 'ஜனநாயகத்தை காப்போம்' என்ற பதாகைகளை உயர்த்தி பிடித்தபடி கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக செல்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.