கேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை 483 பேர் இறந்துள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் மூன்றாம் கட்ட நிவாரண பணிகள் தொடர்ந்து தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த மாபெரும் பேரிருடலிருந்து கேரளா மீண்டும் வரும் தருணத்தில் தற்போது அங்கு தொற்றுநோய்கள் பரவி வருகின்றன. அதிலும் குறிப்பாக எலிக்காய்ச்சல் பரவி கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் தற்போது வரை எலிக்காய்ச்சலால் 66 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள சேதத்திற்கு பிறகு பல்வேறு தொற்றுநோய்கள் பரவி வருகிறது. தோற்று நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 842 மக்களில் 372 பேருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
எலியின் சிறுநீரால் இந்த நோய் பரவுவதாக கூறப்பட்ட நிலையில் மக்கள் எலிக்காய்ச்சல் மட்டுமல்ல எந்த விதமான தோற்று நோயாக இருந்தாலும் சுய சிகிச்சை செய்யவேண்டாம் மருத்துவமனையை நாடும்படி கேரள சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.