![rakesh tikait](http://image.nakkheeran.in/cdn/farfuture/sUWUH9dGLM7yOYgKN5wcN2lEoeZZ7TDQhf0kROnDnpI/1639548369/sites/default/files/inline-images/ddefr.jpg)
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்றுவந்த விவசாயிகளின் போராட்டம் அண்மையில் வெற்றியுடன் நிறைவடைந்தது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்ற மத்திய அரசு, போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாக உத்தரவாதம் வழங்கியுள்ளது.
மத்திய அரசின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட விவசாயிகள், போராட்டத்தைத் தற்காலிகமாக கைவிடுவதாகவும், உத்தரவாதம் அளித்துள்ள மத்திய அரசு, அவற்றை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் எனவும் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், போராட்டக் களத்திலிருந்து தங்கள் வீடுகளுக்குச் செல்லத் தொடங்கினர்.
ஏற்கனவே சிங்கு மற்றும் திக்ரி எல்லைப்பகுதியிலிருந்து விவசாயிகள் வெளியேறிய நிலையில், தற்போது காசிப்பூர் எல்லையில் மீதமிருந்த விவசாயிகளும் விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தலைமையில் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டனர். அப்போது பேசிய ராகேஷ் திகைத், தங்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாவும், அது திரும்பப்பெறப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், "எங்களுடன் இருந்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். லங்கார்களை நடத்தியவர்களுக்கும், எங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுவந்த கிராம மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற்ற பிறகு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. எங்கள் இயக்கம் தற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளது. திரும்பப் பெறப்படவில்லை" என கூறியுள்ளார்.