உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷ் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இந்தியாவின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பி.எம் கேர்ஸ் நிதி மூலம் உருவாக்கப்பட்ட 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகளை இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த 35 ஆலைகள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டதன் மூலம், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போதுபிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலை இயங்கவுள்ளது.
இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட 35 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகளில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்ட பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலையும் அடங்கும். இந்த ஆக்சிஜன் ஆலைகளை நாட்டிற்கு அர்ப்பணித்த பிறகு பிரதமர் ஆற்றிய உரை வருமாறு;
குறுகிய காலத்தில் இந்தியா ஏற்படுத்தியுள்ள வசதிகள், நாட்டின் திறனைக் காட்டுகிறது. ஒரு கரோனா பரிசோதனை ஆய்வகத்தில் இருந்து ஆரம்பித்து 3,000 பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட்டது வரை, முகக்கவசங்கள் மற்றும் கருவிகளை இறக்குமதி செய்தது முதல் அவற்றை உற்பத்தி செய்ததுவரை இந்தியா வேகமாக முன்னேறுகிறது.
கோவின் தளத்தை உருவாக்கி, பெரிய அளவில் எவ்வாறு அளவில் தடுப்பூசி செலுத்துவது என்பது குறித்து உலகிற்கே இந்தியா வழிகாட்டியது. மாநில மற்றும் மத்திய அரசுகளின் முயற்சியால் இந்தியாவில் 4,000 புதிய ஆக்ஸிஜன் ஆலைகள் பிஎம் கேர்ஸ் மூலம் நிறுவப்படும். நம் நாடும் இங்குள்ள மருத்துவமனைகளும் தற்போது மேலும் திறன் மிக்கவையாக ஆகியுள்ளன.