குல்புஷன் ஜாதவ் மனைவி மற்றும் தாயாருக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்!
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்தியர் குல்புஷன் ஜாதவைச் சந்திக்க அவரது மனைவி மற்றும் தாயாருக்கு பாகிஸ்தான் விசா வழங்கியுள்ளது.
இந்திய இராணுவத்தில் பணியாற்றிய குல்புஷன் ஜாதவ் உளவு வேலை பார்த்ததாகக் கூறி, குல்புஷன் ஜாதவ் என்பவரைக் கைதுசெய்து தூக்குதண்டனை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம். இதை எதிர்த்து இந்திய அரசு மேல்முறையீடு செய்தது. இதுதொடர்பான வழக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு முடியும் வரை குல்புஷன் ஜாதவ்விற்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை நிறைவேற்ற சர்வதேச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், தனது கணவரைச் சந்திக்க அனுமதி வழங்கவேண்டும் என குல்புஷன் ஜாதவ்வின் மனைவி இந்திய அரசின் உதவியோடு கோரியிருந்தார். இந்திய அரசின் சார்பில் குல்புஷனின் தாயாருக்கும் அனுமதி கோரப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை குல்புஷன் ஜாதவ்வின் மனைவி மற்றும் தாயாருக்கு விசா வழங்கியுள்ளது. அவர்கள் இருவரும் வரும் டிசம்பர் 25ஆம் தேதியன்று பாகிஸ்தான் சிறையில் குல்புஷனைச் சந்திப்பார்கள். அவர்களுக்கான விசா இந்திய வெளியுறவுத்துறையின் மூலமாக நாளை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.