மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த எட்டாம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு 9வது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மருத்துவர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை 25 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் தொடங்கினர். அதன் ஒரு பகுதியாகப் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களைச் சிபிஐ அதிகாரிகள் சேகரித்தனர். இந்த குழுவில் சிறப்பு மருத்துவர்கள் குழு, சிறப்புத் தடயவியல் குழுவினரும் அடங்கியுள்ளனர். அதே சமயம் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சிபிஐயிடம் மாநில போலீசார் ஒப்படைத்தனர். இந்நிலையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை மறுநாள் (20.08.2024) விசாரணைக்கு வர உள்ளது.