கடந்த 2015ஆம் ஆண்டு, அந்தமானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மயபந்தர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் போலீசார் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு மதுபோதையில் நின்று கொண்டிருந்த ஜானக்ராம் என்பவர், பெண் போலீசாரை ‘டார்லிங்’ என்று அழைத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, அந்த பெண் போலீஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், ஜானக்ராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு வந்த போது ஜானக்ராமுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.
நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனை தீர்ப்பை எதிர்த்து, ஜானக்ராம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி ஜெய செங்குப்தா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ‘முன்பின் தெரியாத பெண்களை ‘டார்லிங்’ என அழைப்பது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் குற்றங்களுக்கு ஈடானது. பாலியல் நோக்கத்துடன் இவ்வாறு அழைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கலாம்’ எனக் கூறினார். இதனையடுத்து, குற்றவாளியின் மூன்று மாத சிறைத் தண்டனையை ஒரு மாத சிறைத் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டார்.