தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீ சில்லா மாவட்டம் முட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரய்யா. இவரது மகள் ஷாலினி. நேற்று காலை ஷாலினி அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் கோவிலுக்குச் சென்று திரும்பிய போது திடீரென வந்த கடத்தல்காரர்கள் அவரை காரில் கடத்த முயன்றனர். இதனைத் தடுக்க முயன்ற ஷாலினியின் தந்தை சந்திரய்யாவையும் தாக்கி அவரை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றனர்.
இதனால் செய்வதறியாது தவித்த சந்திரய்யா அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட விசாரணையில் குற்றவாளியை நெருங்கும் முன்பே ஷாலினி இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட வீடியோ வெளியானது.
அந்த வீடியோவில், தன்னைக் கடத்தியவர்களில் ஒருவர் தன் காதலர் என்றும், அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் ஷாலினி கூறியுள்ளார். இது திட்டமிடப்பட்ட கடத்தல் அல்ல. முதலில் அனைவரும் முகத்தை மூடி இருந்ததால், நான் கடத்தப்பட்டதாகவே உணர்ந்தேன் என்றும் கூறியுள்ளார்.
இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தவர்கள் என்பதும், சில மாதங்களுக்கு முன் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முற்படுகையில், பெற்றோர் அதைத் தடுத்து பெண் மைனர் என்பதால் காதலர் மீது புகாரளித்து, அவர் சிறிது நாட்கள் சிறையில் இருந்துள்ளார் என்பதும் பின்னர் தெரியவந்தது. முதலில் பெண் கடத்தப்பட்டதாக நினைத்த காவல்துறையினர் ஆறு தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது.