ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்தவுடனே இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தலைமையின் உத்தரவுப்படி 25 அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவை இன்று (11/04/2022) பதவியேற்றுக் கொண்டது. அவர்களுக்கு ஆந்திர மாநில ஆளுநர் விஸ்வபூஷன் ஹரிச்சந்திரன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சித்தூர் மாவட்டம், நகரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், நடிகையுமான ரோஜா உள்ளிட்ட 25 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதில், 10 பேர் ஏற்கனவே அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்கள் என்றும், 15 பேர் புதியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவைப் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிலையில், யார் யாருக்கு எந்தெந்த துறைகள் ஒதுக்கீடு என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமைச்சர் ரோஜாவுக்கு ஆந்திர மாநில அரசின் சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி அமைந்த தொடக்கத்திலேயே அமைச்சர் பதவி கிடைக்கும் என்றெல்லாம் தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.