கேரளாவில் நடக்கும் நரபலி சம்பவங்கள் திடீரென்று தற்போது முளைத்து விடவில்லை 1973களிலேயே அது துளிர் விட்டிருக்கிறது என்கிறார்கள் கொல்லம் நகர் பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள்.
கொச்சியை சேர்ந்த மந்திரவாதி முகம்மது ஷாபி. பில்லி, சூனியம் வைப்பு எடுப்பு மூலமாக குடும்ப சாபத்தைப் போக்க வைப்பது போன்றவைகளை மாந்திரீகத்தின் மூலமாக மக்களை வசியப்படுத்தி பணம் பார்த்து வந்திருக்கிறார். மக்களை வசியப்படுத்துகிற வித்தையறிந்த முகம்மது ஷாபி, ஸ்ரீதேவி என்ற பெண் பெயரில் போலி பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி அதன் மூலம் குடும்ப சாபம் விலக, வருமானம் பெருகி செல்வம் கொழிக்க, வியாபாரம் விருத்தியடைய என்று கவர்ச்சியான வசீகரப் பேச்சுகளின் மூலம் வீசிய வலையில் சிக்கியவர் தான் லைலா.
நாட்டு மருந்துகளுடன் அலோபதி மாத்திரைகளையும் கலந்து மசாஜ், உடம்பு வலி போக்குதல் என்ற இரண்டாம் ரக வைத்தியங்களைச் செய்து வந்த பகவல்சிங் ஒரு அரசியல் கட்சியிலுமிருக்கிறார். கணவனின் வைத்தியத்தில் போதுமான வருமானம் கிடைக்காமல் போகவே குறுக்கு வழியில் பணம் தேடுகிற சிந்தனையிலிருந்த லைலாவுக்கு மந்திரவாதி முகம்மது ஷாபியின் தொடர்பு கிடைக்க, வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டவர், லைலாவுடன் நெருங்கிய தொடர்பையும் வைத்துக் கொண்டுள்ளார். பின்னர் பகவல்சிங்குடன் அறிமுகமான மும்மது ஷாபி, அவர்களிடம் நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என ஆசை வார்த்தை காட்டி பகவல்சிங்கிடம் வெயிட்டான தொகையைப் பெற்றுக் கொண்டு, பலி கொடுப்பதற்கு வயிற்றுப்பாட்டிற்காக ஆதரவற்ற லாட்டரி டிக்கெட் விற்கிற பெண்களின் மீதான பார்வையைத் திருப்பியிருக்கிறார். ஆலுவா பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்றுக் கொண்டிருந்த ரோஸ்லின் என்ற பெண்ணை பணத்தாசை காட்டி அழைத்து வந்து ஈவு இரக்கமற்ற வகையில் கொடூரத்தனமாக அறுத்துக் கொன்று குரளி பூஜை, கடவுளைத் திருப்தி செய்ய, செல்வம் பெருக என்ற பசப்பு வார்த்தைகளால், யாகத்திற்குப் பின்பு புனித நீரை வீடு முழுக்கத் தெளிக்கிறதைப் போன்று நரபலி கொடுத்த அறை முழுக்க அந்தப் பெண்ணின் மார்பகத்தை அறுத்தெடுத்து பீறிட்ட சூடான ரத்தத்தைத் தெளித்திருக்கிறார்.
முதல் நரபலிக்குப் பின்பு சொன்னது நடக்கவில்லை. செல்வம் பெருகவில்லையே என்ற பகவல்சிங்கிடம், குடும்பத்தில் சாபமிருக்கு. முழுசா தீரணும். அதுக்கு இன்னொரு நரபலி கொடுக்கணும் என்ற முகம்மது ஷாபி, அதற்காக முந்தைய தேடலைப் போன்றே பிழைப்பிற்காக அங்கே லாட்டரி சீட் விற்ற தர்மபுரியைச் சேர்ந்த பத்மாவை ஆசை வார்த்தை சொல்லி கூட்டி வந்து துடிக்கத் துடிக்க நரபலியைக் கர்ண கொடூரமாக நடத்தியிருக்கிறார்கள். அறை முழுக்க அந்த அப்பாவிப் பெண்ணின் ரத்த அபிஷேகம் நடத்தியிருக்கிறார்கள். தொடர்ந்து ரோஸ்லின் உடலை 40 துண்டுகளாக வெட்டிப் புதைத்ததைப் போன்றே பத்மாவின் உடலை 56 துண்டுகளாக வெட்டி உப்புக் கண்டம் போட்டிருக்கிறார்கள்.
முதல் நரபலியில் சாபம் முழுசா தீரலை. இப்ப சாபம் விலகி செல்வம் பெருகணும்னா, சாமிக்குப் படைத்த நரமாமிசத்தை இரண்டு பேரும் சாப்பிடணும், என்று சொன்னபோது தம்பதியர் யோசித்திருக்கிறார்கள். கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று கூசாமல் மந்திரவாதி ஷாபி சொன்னதைக் கேட்டு தம்பதியரான பகவல்சிங்கும் லைலாவும் உப்புக் கண்டம் போட்ட மனித மாமிசத்தை மசாலாவாக்கி சமைத்துச் சாப்பிட்ட கொடூரமும் நடந்தேறியிருக்கிறதாம்.
இரண்டு நரபலி சம்பவங்களும் அடுத்தடுத்த கால அவகாசத்தில் நடந்தாலும், ரோஸ்லினைக் காணவில்லை என உத்திரப்பிரதேசத்திலிருந்து வந்த அவரது மகள் மஞ்சு கொடுத்த புகாரில் காலடி காவல் நிலைய போலீசாரின் புலன் விசாரணையில் முன்னேற்றமில்லை. பின்னர் பத்மாவின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட போலீசாருக்கு, பத்மாவை முகம்மது ஷாபி காரில் அழைத்துச் செல்கிற சி.சி.டி.வி.காட்சி கிடைக்கவே அதன் மூலம் இரண்டு நரபலி சம்பவங்களும் வெளிவந்து கேரளாவைப் பதற அடித்திருக்கின்றன.
சம்பவத்திற்குப் பின்பும் மந்திரவாதி முகம்மது ஷாபியும், லைலாவும் வழக்கம் போல் எந்தவித பதற்றமும் சலனமுமில்லாமல் நெருக்கமாக இருந்திருக்கிறார்களாம். உழன்று கொண்டிருந்த பகவல்சிங் விஷயத்தை வெளிப்படுத்தி விடுவார். மாட்டிக் கொள்வோம் என்று இருவரும் பதறியிருக்கிறார்கள். அதற்கு நேரம் வைக்காமல் பகவல்சிங்கை போட்டுத்தள்ளிவிட வேண்டும் என்று மந்திரவாதி முகம்மது ஷாபியும் லைலாவும் திட்டம் போட்டிருக்கும் சமயத்தில்தான் போலீசிடம் மொத்தமாய் அனைவரும் சிக்கியிருக்கின்றனர். இதனால் மூன்றாவது நரபலியும் தடுக்கப்பட்டிருக்கிறதாம்.
கேரளாவில் நரபலிகள் நடப்பது இது முதல் சம்பவமல்ல, என்று விவரிக்கிற சமூக நல ஆர்வலர்களோ, 1967ன் போது கேரள மாநிலம் அமைக்கப்பட்டது. 1973களில் கொல்லம் நகரின் மத்தியப் பகுதியில் அழகேசன் என்பவர் வெளி ஏரியாவிற்குச் சென்று சாமியாராக மாறி ஊர் திரும்பியிருக்கிறார். தன் வீட்டின் முன்னே சாமி பீடத்தை அமைத்து சிறிய குடில் போட்ட அழகேசன் அதற்கு பூஜை புனஸ்காரங்களைச் செய்யத் தொடங்கியதோடு, ஜோசியம், பில்லி, சூனியம் எடுப்பு, வசியமாக்குதல், அருள்வாக்கு என்று அப்பாவி மக்களை வசீகரப்படுத்தி பிழைப்பை ஓட்டி வந்திருக்கிறார்.
தன் சாமியார் தொழிலில் அடுத்த கட்டத்திற்கு நகர விரும்பிய அழகேசன் தனக்கு சக்தி கிடைக்கவும், அதற்காக கடவுளைத் திருப்தி செய்ய நரபலி கொடுப்பதற்கான ஏற்பாட்டில் இறங்கியிருக்கிறார். நரபலி கொடுப்பதற்காக தன் வீட்டின் முன்புற பக்கமுள்ள வீட்டின் 4 வயது தலைச்சன் குழந்தையான தேவதாசனை யாருக்கும் தெரியாமல் அழைத்து வந்து நடுப்பகல் சூரியன் மத்திக்கு வருகிற நேரத்தில் கழுத்தையறுத்து நரபலி கொடுத்து, குழந்தையின் ரத்தத்தை சாமி சிலையில் அபிஷேகம் செய்து, குடிசை முழுக்க ரத்தத்தைத் தெளித்திருக்கிறானாம். பின்னர் குழந்தை தேவதாசனின் உடலை தன் வீட்டின் பின்புறம் புதைத்துவிட்டு, அந்த இடத்தை மறைப்பதற்காக வாழைக் கன்றுகளையும் நட்டிருக்கிறார்.
இதற்குள் குழந்தை தேவதாசனைக் காணாமல் தவித்த அவனது பெற்றோர்கள் போலீசில் புகார் செய்திருக்கிறார்கள். விசாரணையில் முன்னேற்றமில்லையாம். அதே சமயம் சாமியார் அழகேசன் சலனமேயில்லாமல் தொழிலை மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சாமியார் அழகேசனின் வீட்டின் பின் பக்கம் வாழைக்கன்று திடீரென்று ஊன்றப்பட்ட தகவல் போலீஸ் வரை போக, சந்தேகத்தின் அடிப்படையில் அவரைத் தீவிரமாகப் போலீஸ் விசாரித்தபோது தான், குழந்தை தேவதாசன் நரபலி கொடுக்கப்பட்டது வெளியே தெரியவந்து மக்களைப் பதற அடித்திருக்கிறது. விரைவாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் தீர்ப்பின்படி சாமியார் அழகேசன் தூக்கிலிடப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.
பில்லி, சூனியம், செய்வினை, செல்வம் பெருக ஏமாறுபவர்கள் இருக்கிற வரையில் ஏமாற்றுபவர்களின் தொழிலில் பசுமை தான்.