கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ள மாதுர் கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் 'சார்', 'மேடம்' ஆகிய வார்த்தைகள் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் இனி பஞ்சாயத்து அதிகாரிகளை சார்/ மேடம் என அழைக்க வேண்டாமென்றும், அதற்குப் பதிலாக அதிகாரிகளின் பெயர்களைக் கூறியோ அல்லது அவர்களின் பதவிகளைக் கூறியோ அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை வயதில் மூத்தவர்களைப் பெயர் சொல்லி அழைப்பது சங்கடமாக இருந்தால், சேட்டன் (சகோதர்) அல்லது சேச்சி (சகோதரி) என அழைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மக்கள் தங்களது விண்ணப்பங்களில் இனி 'அபெக்ஷிக்குன்னு’ அல்லது ‘அபயார்த்திக்குன்னு’ (கோரிக்கை/வேண்டுகிறேன்) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் மாதுர் கிராமத்தின் பஞ்சாயத்து அறிவித்துள்ளது.
அதற்குப் பதிலாக 'அவகாசப்பெடுன்னு' ’(கேட்டுக்கொள்கிறேன்) அல்லது ‘தல்பார்யாபெடுன்னு’ (விரும்புகிறேன்) என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் எனவும் மாதுர் கிராம பஞ்சாயத்து தெரிவித்துள்ளது. மேலும், இந்த தடை செய்யப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாததைக் காரணம் காட்டி, எந்த அதிகாரியாவது சேவை வழங்க மறுத்தால், அதுதொடர்பாக பஞ்சாயத்து தலைவரிடம் புகார் அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பான அறிவிப்பு பஞ்சாயத்து அலுவலகத்தின் வெளியில் ஒட்டப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட வார்த்தைகளைத் தடை செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்த மாதுர் கிராமத்தின் பஞ்சாயத்து துணைத் தலைவர், "பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜனநாயக அரசில் மக்கள்தான் மேலானவர்கள் என காட்ட வேண்டிய நேரம் இது. ஜனநாயகத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகியோர் பணியாளர்களே. மக்கள் தங்களது உரிமைகளுக்காக எங்களது கருணையை எதிர்பார்த்திருக்க கூடாது" என தெரிவித்துள்ளார்.