கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ளது செருபுழா கிராமம். இந்த கிராம பகுதியில், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, குடியிருப்பு பகுதிக்குள் வந்த காட்டுயானை, வழி தவறி சுற்றித் திரிந்துள்ளது. இதனை அறியாத அப்பகுதி மக்கள், இயல்பாக தங்களின் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில், பொதுமக்களைப் பார்த்து ஆக்ரோஷமடைந்த காட்டுயானை, அவர்களை விரட்டியுள்ளது. காட்டுயானை வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள் வீட்டிற்குள் அலறியடித்து பதுங்கியுள்ளனர். இதனால், கோபம் குறையாத அந்த காட்டுயானை, சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை, தனது தந்தத்தால் முட்டி கீழே தள்ளி, காலால் ஒரு உதை விட்டது. அதே வேகத்தில் அந்த பகுதியைக் கடந்து சென்றது.
இந்த சம்பவம் முழுவதும் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் வீடியோவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் செருபுழா கிராம மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.