கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமான கேரளாவில் அனைத்து வகுப்பினருக்கும் உயர்கல்வியில் இடஓதுக்கீடு அடிப்படையில் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் எங்களுக்கும் உயா்கல்வி படிக்க இடஓதுக்கீடு வேண்டுமென்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தநிலையில் பாலக்காடு தென்மாறாநாடு பகுதியை சோ்ந்த பிரவீணா நாத் என்ற திருநங்கை அங்குள்ள என்.எஸ்.எஸ் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் திருநங்கை என்பதால் சகமாணவர்கள் அவரிடம் பழகுவதை தவிர்த்து வந்ததோடு கேலியும் கிண்டலும் அடித்து வந்துள்ளனர். மேலும் ஆசிரியர்களும் அந்த பிரவீணா நாத்தை வேற்றுமையில் தான் நடத்தி வந்துள்ளனர். இதனால் பிரவீணா நாத் பாதியிலேயே படிப்பை நிறுத்தினார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதால், இதை கேரளா அரசின் கல்வி துறைக்கு கொண்டு சென்றனர். உடனே அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு பிரவீணா நாத் அதே கல்லூரியில் படிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
ஆனால் திருநங்கை பிரவீணா நாத் அதே கல்லூரியில் படிக்க விருப்பம் இல்லை என கூறியதால் கேரளாவில் உள்ள எந்த கல்லூரியிலும் பிரவீணா நாத் படிக்கலாம். அதேபோல் எந்த திருநங்கையும் உயர்கல்வி படிப்பதற்கு அவா்கள் விரும்புகிற கல்லூரியில் படிக்க அவர்களுக்கு சில விதிவிலக்குகள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இந்த நிலையில் அந்த திருநங்கை பிரவிணா நாத் எா்ணாகுளம் மஹாராஜா கல்லூரியில் ஆங்கிலம் இலக்கியம் படிக்க விருப்பம் தெரிவித்து இருந்ததால் அந்த கல்லூரியில் சீட் வழங்கப்பட்டது. அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்க சென்ற பிரவீணா நாத்தை சக மாணவா்களும், ஆசிரியா்களும் கைதட்டி பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
அப்போது நெகிழ்ச்சியடைந்த பிரவிணா நாத், நான் ஏற்கனவே படித்த கல்லூரியில் ஆரம்பத்தில் சக மாணவர்கள் என்னை அவா்களுக்குள் ஓன்றாக தான் பார்த்தனர். ஆனால், நான் திருநங்கை என்று தெரிந்த பிறகு என்னிடம் பழகுவதையும் பேசுவதையும் நிறுத்தினார்கள். பாலினத்தில் நாங்கள் வேறு பட்டாலும் ஒரே மனித இனம் தான் நாங்கள். எங்களையும் இந்த சமூகம் ஏற்று கொண்டு ஓன்றாக தான் பார்க்க வேண்டும் என்றார்.