காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா மீதான வாக்கெடுப்பு மின்னணு வாக்குமுறையில் நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி, தெலுங்குதேசம், சிரோன்மணி அகாலித்தளம், ஆம் ஆத்மி கட்சி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, பிஜு ஜனத்தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேறியது.
இந்த மசோதாவிற்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகியுள்ளது. காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் நிறைவேறிய காஷ்மீர் பிரிப்பு மசோதாவிற்கு ஏற்கனவே இந்திய குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் காஷ்மீர் மாநிலத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
இதனால் காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 இன்றுடன் முடிவுக்கு வந்தது. அதே போல் மாநில அந்தஸ்தை காஷ்மீர் மாநிலம் இழந்துள்ளது. இனி ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் இந்தியாவில் புதியதாக உருவாகியுள்ளது.