ஜப்பானின் டோக்கியோ ஒலிம்பிக்கில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா அதிக பதக்கங்களை வென்று சாதித்தது. நீரஜ் சோப்ரா தடகளத்தில் இந்தியாவிற்கு தங்கத்தை வென்றார். பி.வி. சிந்து, தனிநபர் பிரிவில் இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தினார். லோவ்லினா ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 வருடங்களுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது.
அதேபோல், மீராபாய் சானு பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கத்தினையும், மல்யுத்தத்தில் ரவிக்குமார் தஹியா வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றனர். இன்னொரு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார். மேலும், இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதி வரை முன்னேறி ரசிகர்களின் இதயங்களை வென்றது.
இதனையடுத்து பல்வேறு மாநில அரசுகள், தங்களது மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர் / வீராங்கனைகளுக்குப் பரிசளித்து பாராட்டிவருகின்றனர். இந்தச் சூழலில் கர்நாடக மாநில ஆளுநர், அம்மாநிலத்திலிருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்ற அதிதி அசோக் (கோல்ஃப்), ஃபுஆத் மிர்சா (குதிரையேற்றம்), ஸ்ரீஹரி நடராஜ் (நீச்சல்) ஆகியோருக்கு ஒரு லட்சம் பரிசு அறிவித்தார்.
இந்தநிலையில் கர்நாடக அரசு, திறமையான 75 வீரர், வீராங்கனைகளைக் கண்டறிந்து, அவர்களைப் பாரிஸ் ஒலிம்பிக்கிற்காக தயார்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் 75 பேருக்கும் பயிற்சி, விளையாட்டு உபகரணங்கள் போன்ற தேவைகளுக்காக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படவுள்ளது.
இந்தக் குழுவிற்கு தலைமை தாங்கும் கர்நாடக அரசின் இளைஞர் அதிகாரமளித்தல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.சி. நாராயண கவுடா, அறிவியல் முறையில் வீரர்களின் திறமையைக் கண்டுபிடிக்கப்போவதாகக் கூறியுள்ளார்.