Skip to main content

மத்திய அமைச்சர் குமாரசாமி குறித்து கருத்து; சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர்!

Published on 11/11/2024 | Edited on 11/11/2024
Karnataka Minister Comment on Union Minister Kumaraswamy is to be  Controversy

நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில், சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய தொகுதிகளில் எம்.எல்.ஏக்களாக பதவி வகித்த மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, பா.ஜ.கவின் பசவராஜ் பொம்மை மற்றும் காங்கிரஸின் இ.துக்காராம் ஆகியோர் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், சென்னபட்டணா தொகுதியில் எம்.எல்.ஏவாக பதவி வகித்து வந்த ஹெச்.ட.குமாரசாமி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அதன் பிறகு, அந்த மூன்று தொகுதிகளை காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலோடு, கர்நாடகாவில் காலியானதாக அறிவிக்கப்பட்ட 3 தொகுதிகளில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், பா.ஜ.க மீது அதிருப்தியடைந்த யோகேஷ்வர், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து சென்னபட்டனா தொகுதியில் போட்டியிடுகிறார். 

சென்னபட்டனா தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் யோகேஷ்வரை ஆதரித்து கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜமீர் அகமது கான் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், மத்திய அமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி.குமாரசாமியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. நேற்று நடந்த பிரச்சாரத்தில் பேசிய கர்நாடகா அமைச்சர் ஜமீர் அகமது கான், “பா.ஜ.கவை விட கருப்பு குமாரசாமி ஆபத்தானவர். எங்கள் கட்சியில் காங்கிரஸ் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, சிபி யோகேஷ்வர் சுயேட்சையாக போட்டியிட்டார். அவருக்கு பாஜகவில் சேர்வதைத் தவிர வேறு வழியில்லை. அவர், மதச்சார்பற்ற ஜனதா தளம் (எஸ்) கட்சியில் சேரத் தயாராக இல்லை. ஏனென்றால், கருப்பு குமாரசாமி மிகவும் ஆபத்தானவர். இப்போது யோகேஷ்வர் தனது சொந்த கட்சிக்கே வந்துவிட்டார்” என்று பேசினார். 

மத்திய அமைச்சர் குமாரசாமியை கருப்பு குமாரசாமி என்று அமைச்சர் பேசியதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம்(எஸ்) கடும் விமர்சனம் செய்து வருகிறது. கர்நாடக அமைச்சரின் இனவெறி இழிவுக்காக கர்நாடக அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்