கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை என்ற திட்டத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும் அடுத்த முதல்வர் யார் என்பதில் முன்னால் முதல்வர் சித்தராமையா மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே போட்டி நிலவி வந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் கடந்த சனிக்கிழமை அன்று சித்தராமையா முதல்வராகவும், டி.கே சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்த அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5 திட்டங்களுக்குக் கொள்கை அளவில் ஓப்புதல் தரப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் சித்தராமையா, “சட்டமன்ற தேர்தலின் போது அறிவித்த 5 திட்டங்களுக்கும் கொள்கை அளவில் அமைச்சரவை ஓப்புதல் அளித்துள்ளது, சாதாரண அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். அதற்காக பேருந்துகளில் பெண்கள் இலவச பேருந்து அட்டை வழங்கப்படும். ஆனால் இந்த திட்டம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே. மற்ற தமிழ் உள்ளிட்ட பிற மாநில பெண்களுக்குப் பொருந்தாது. இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்” என்றார்.