இடைத்தேர்தலையொட்டி அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என்றும், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே தான் அந்த தீவிரவாதி என்றும் பேசினார். அவரின் இந்த பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக வின் போபால் தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர், "நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்" என கூறினார். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்த நிலையில் பாஜக பிரக்யாவிற்கு கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து அவர் தனது கருத்தை திரும்ப பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆசம் கான், "பிரக்யா தாக்கூரின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்தால் மட்டும் போதாது. அவரை போன்றவரை பாஜக கட்சியிலிருந்தே தூக்கி எறிய வேண்டும். காக்கி கால்சட்டையைப் போல கோட்சேவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு அடையாளம்தான். நமது தேசம் காந்தியுடன் இருக்க வேண்டுமா அல்லது கோட்சேவுடன் இருக்க வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்" என கூறியுள்ளார்.