Skip to main content

ஹிஜாப் விவகாரம்; உயர்நிலை பள்ளி கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு

Published on 08/02/2022 | Edited on 08/02/2022

 

karnataka

 

கர்நாடகா மாநிலத்தில், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி தூண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன்காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன.

 

இதன்தொடர்ச்சியாக கல்லூரிகளில் காவி துண்டை அணிந்து ஒரு தரப்பும், ஹிஜாப்பிற்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு தரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர். காவல்துறையினர் சில இடங்களில் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்தசூழலில் கல்லூரி ஒன்றில் காவி துண்டு அணிந்தவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட, மற்றொரு தரப்பு ஜெய் பீம் என முழக்கமிடும் காணொளி வெளியானது.

 

அதன்தொடர்ச்சியாக ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை சூழ்ந்து காவி துண்டு அணிந்தவர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட, பதிலுக்கு அந்த மாணவி அல்லாஹு அக்பர் என கோஷமிடுவது, சிவமொக்காவில் கல்லூரி ஒன்றில் தேசிய கோடி ஏற்றப்பட வேண்டிய இடத்தில் காவி கொடி ஏற்றப்பட்டது, ஹிஜாப் அணிந்த மாணவிகளை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றுவது என பல்வேறு வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக அரசு, சமத்துவம், ஒருமைப்பாடு மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் ஆடைகளை கல்லூரி மாணவ/மாணவியர் உடுத்தக்கூடாது என அறிவித்துள்ள நிலையில், ஹிஜாப் தடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஹிஜாப் தொடர்பான விவகாரத்தில் மோதலும், பதற்றமும் அதிகரித்துள்ள இந்தச்சூழலில், அம்மாநில கல்லூரிகளுக்கும் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

 

 

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், "அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு அனைத்து மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினரையும், கர்நாடக மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளேன். சம்மந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்