கர்நாடகா மாநிலம் உடுப்பி டவுன் அம்பலவாடி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த கல்லூரியில் படித்து வந்த 3 மாணவிகள் சேர்ந்து கழிவறையில் செல்போன் கேமரா மூலம் சக மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர். மேலும், இந்த வீடியோவை அந்த மாணவிகள் கல்லூரியில் படிக்கும் ஆண் நண்பர்களின் வாட்ஸ்அப் குழுவிற்கு அனுப்பி வைத்தனர் எனச் செய்திகள் பரவின. இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை அறிந்த கல்லூரி நிர்வாகம், இந்த விவகாரத்தில் 3 மாணவிகளை உடனடியாக கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.
இந்த சம்பவத்துக்கு, பா.ஜ.க, இந்து அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல், இது குறித்து விசாரணை நடத்தி உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில், ஆபாசமாக வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக உடுப்பி காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ள 3 மாணவிகள் மீது ஆபாசமாக வீடியோ எடுத்து பெண்ணை அவமதித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேசமயம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, “நான் யாரையும் பாதுகாக்கும் நோக்கத்தில் இங்கு வரவில்லை. தேசிய மகளிர் ஆணையத்திற்கு புகார் வந்ததால் விசாரணை மேற்கொண்டேன். இந்த வழக்கில் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். போலி வீடியோ, தகவல்களுக்கு இடமளிக்கக் கூடாது. போலீஸ் விசாரணையில் கழிவறையில் ரகசிய கேமரா மற்றும் செல்போன் கேமரா வைக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. கேமரா பொருத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் வதந்தி பரவி வருகிறது. தவறான வீடியோக்கள் சுற்றி வருகின்றன. இந்த வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் இறுதி முடிவுக்கு வரும். அதுவரை வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்'' என்றார். இருந்தபோதும், இந்த விவகாரத்தில் சர்ச்சையான கருத்துகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, கர்நாடகா காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், “இதை ஒரு சிறு சம்பவமாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர இதை அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது. அரசை எதிர்க்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பா.ஜ.க தற்போது பாத்ரூம் அரசியலுக்கு சென்றுவிட்டது. குழந்தைகளின் செயல்பாடுகளை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி வருகிறார்கள்” என்று கருத்து தெரிவித்திருந்தது.
இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பா.ஜ.க பிரமுகர் சகுந்தலா நடராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸின் கூற்றுப்படி முஸ்லிம் இளம் பெண்கள் கழிவறையில் கேமராவை வைத்து இந்து பெண்ணை விளையாட்டாக வீடியோ எடுத்தனர் என்று வைத்துக்கொள்வோம். சித்தராமையாவின் வீட்டுப் பெண்களை இதுபோன்று வீடியோ எடுத்தால் அதை குழந்தைகளின் விளையாட்டாக ஏற்பீர்களா?” என்று சித்தராமையாவை டேக் செய்து ட்விட் செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க பிரமுகர் கருத்து தெரிவித்தது தொடர்பாக பெங்களூர் ஹை கிரவுண்ட் காவல் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பா.ஜ.க பிரமுகர் சகுந்தலா நடராஜ் மீது வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.