இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் மீண்டும் கரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் டெல்லியை தொடர்ந்து கர்நாடகா மாநிலமும் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணிவரை அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.
மேலும் பொதுஇடங்களில் அனைத்து விதமான கூட்டங்களுக்கும் தடை விதித்துள்ள கர்நாடக அரசு, திரையரங்குகள், மால்கள், பப்கள் மற்றும் பார்கள் 50 சதவீதம் பேருடன் இயங்க அனுமதியளித்துள்ளது. அதேபோல் பீகார் மாநிலத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடியாக வகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத மாணவர்களுடன் 9 முதல் 12-வது வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
திரையரங்குகள், ஜிம்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அரங்கங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடைகள் இரவு 8 மணிவரை மட்டுமே திறந்து வைத்திருக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சத்தீஸ்கர் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் அனைத்து பொது நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊர்வலங்கள், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், சமூக, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கரோனா உறுதியாகும் சதவீதம் 4 ஆக இருக்கும் மாவட்டங்களில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், நூலகங்கள், நீச்சல் குளங்கள், மால்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், அரங்கங்கள் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.