
பாஜக பெண் வேட்பாளரை காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பாலியல் ரீதியிலான விமர்சனம் செய்தது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி மற்றும் கமல்நாத் ஆகியோர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 3ம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் 'தப்ரா' தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசிய அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத், அதே தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் இமார்டி தேவியை பாலியல் ரீதியாகத் தரக்குறைவாகப் பேசினார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாகியுள்ள நிலையில், அவரின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "கமல்நாத் எனது கட்சியைச் சேர்ந்தவர், ஆனால் தனிப்பட்ட முறையில், அவர் பயன்படுத்திய மொழி எனக்குப் பிடிக்கவில்லை... அவர் யாராக இருந்தாலும், அவரது செயலை நான் ஆதரிக்கமாட்டேன். இது துரதிர்ஷ்டவசமானது" எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் கருத்து குறித்துப் பேசியுள்ள கமல்நாத், "இது ராகுல் காந்தியின் கருத்து. நான் அப்படிப் பேசியபோது என்ன நடந்தது என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன். நான் யாரையும் அவமதிக்க எண்ணாதபோது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? யாராவது அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால், அதற்கு நான் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.