உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல், மார்ச் 7ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக உத்தரப்பிரதேச தேர்தல் கருதப்படுவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸில் வீடு வீடாகச் சென்று பாஜகவிற்கு வாக்குச் சேகரித்தார். ஆனால், ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொல்லப்பட்ட பெண்ணின் கிராமத்திற்குச் செல்வதை ஜே.பி நட்டா தவிர்த்துவிட்டார்.
ஹத்ராஸில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பலியான பெண்ணின் சகோதரர், ஜே.பி நட்டா தங்கள் கிராமத்திற்கு வருவதைப் புறக்கணித்துள்ளது குறித்து கூறுகையில், "அவரது வருகை எங்களது உணர்வுகளை தணித்திருக்கலாம். நாங்கள் நீதித்துறையின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து நீதியை எதிர்நோக்கியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை - கொலை சம்பவத்தை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.