இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் முழு அளவில் பயன்பாட்டில் உள்ளன. ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டாலும், அதன் வர்த்தக ரீதியிலான விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை. மேலும், மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தடுப்பூசி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை.
இதற்கிடையே அமெரிக்க மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனம், இந்தியாவில் தனது ஒற்றை டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி கோரி சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தது. இந்தநிலையில், அத்தடுப்பூசிக்குத் தற்போது அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திருத்தப்பட்ட விதிகளின்படி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு உள்நாட்டுச் சோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இந்தியாவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை இந்தியாவில் செலுத்திக்கொள்ளும் முதல் 100 பேரின் 7 நாள் பாதுகாப்பு மதிப்பீட்டுத் தரவை அந்த நிறுவனம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகே ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி முழு அளவிலான பயன்பாட்டிற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.