இந்தியாவின் அண்டை நாடுகள் சீனாவுடன் நெருங்கும் நிலையில், இந்தியா அமெரிக்காவோடு நெருக்கம் காட்டிவருகிறது. இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி என்பவரைப் பரிந்துரைத்துள்ளார். எரிக் கார்செட்டி ஜோ பைடனின் நண்பராவார். ஜோ பைடனின் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தியவர்களில் எரிக் கார்செட்டியும் ஒருவர்.
எரிக் கார்செட்டி தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயராக பணியாற்றிவருகிறார். கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து அவர் இந்தப் பதவியை வகித்துவருவது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் ஜோ பைடனோடு நேரடி தொடர்பில் இருப்பவர், இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எரிக் கார்செட்டியை இந்தியாவிற்கான தூதரக நியமிப்பதற்கான அமெரிக்க அதிபரின் பரிந்துரைக்கு அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் செனட் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்பிறகே எரிக் கார்செட்டி இந்தியாவிற்கான தூதரக நியமிக்கப்படுவார். செனட்டில் எரிக் கார்செட்டியை தூதராக நியமிப்பது குறித்து வாக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.