புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரிகளுக்கான எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நாடு முழுவதும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 'எம்.பி.பி.எஸ்' மற்றும் 'பி.டி.எஸ்' இடங்கள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்கள், காரைக்காலில் உள்ள 50 இடங்கள் என மொத்தமாக 200 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மேலும் வரும் கல்வியாண்டு முதல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுவதால் கூடுதலாக 49 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு இந்திய மருத்துவ கழகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 249 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஜிப்மர்க்கு என்று தனியாக நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதாகவும், நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கருதி வரும் கல்வியாண்டு முதல் ஜிப்மர்க்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜிப்மர் மருத்துவக் கல்லூரி முதல்வர் (DEEN)பங்கஜ்குந்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'வரும் கல்வி ஆண்டில் ஜிப்மர் தனியாக தேர்வு நடத்தாது. நீட் தேர்வு மூலம் சேர்க்கை நடக்கும். மத்திய சுகாதாரத்துறை மூலம் கிடைத்த உத்தரவின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://jipmer.edu.in/ என்ற இணைய தளத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீட் தேர்வு தொடர்பான விவரங்களுக்கு https://ntaneet.nic.in/ntaneet/Welcome.aspx மற்றும் https://nta.ac.in/ ஆகிய இணையதள முகவரி அணுகி அறிந்துக்கொள்ளலாம்.