Skip to main content

காங்கிரஸ் அரசியல் செய்கிறது... பா.ஜனதாவோ மக்களுக்கு சேவை செய்கிறது... -ஜே.பி.நட்டா பதில்

Published on 31/05/2020 | Edited on 31/05/2020
JP-Nadda



பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ஊரடங்கு தோல்வி அடைந்ததாக ராகுல் காந்தி கூறியது பற்றி நிருபர்கள் கேட்டனர்.
 

இதற்கு ஜே.பி.நட்டா, கரோனா போன்ற பிரச்சினைகளை ராகுல் காந்தி ஆழமான புரிந்து கொள்வதில்லை. அவரது புரிதல் திறன் மற்றும் கற்றல் திறன் குறைவானது. அதனால்தான், அவர் குழப்பமான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
 

ஊரடங்கு ஏன் என்று சில நேரங்களில் கேள்வி கேட்கிறார். வேறு சில நேரங்களில், ஊரடங்கை ஏன் நீட்டிக்கவில்லை என்று கேட்கிறார். அவரது நோக்கம், பிரச்சினைக்கு தீர்வு காண்பது அல்ல, அரசியல் செய்வது மட்டும்தான். காங்கிரஸ், அரசியல் செய்கிறது. பா.ஜனதாவோ மக்களுக்கு சேவை செய்து வருகிறது.
 

உரிய நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. பலம்வாய்ந்த நாடுகள் எல்லாம் செய்வதறியாமல் திணறி வருகின்றன. தற்போது, நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு நான்கரை லட்சம் பாதுகாப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றார்.
 

தொடர்ந்து பேசிய ஜே.பி.நட்டா, மோடியின் இரண்டாவது ஆட்சியின் முதல் ஓராண்டு காலம், பல்வேறு துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டது. குடியுரிமை சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், பயங்கரவாத தடுப்பு சட்டங்களை வலுப்படுத்துதல், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஒடுக்கும் சட்டம், வங்கிகள் இணைப்பு ஆகியவை மத்திய அரசின் வெற்றிகளில் அடங்கும். இவற்றில் அமித்ஷாவுக்கும் பங்குள்ளது. அயோத்தி வழக்கு முடிவுக்கு வருவதை காங்கிரஸ் தாமதப்படுத்தியது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்