தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சமீபத்தில் “நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என அவசியமில்லை. நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன்” எனத் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆளுநருக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் அண்மையில் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவன் ஜெகதீஸ்வரன் (வயது19) என்பவர் 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவனின் தந்தை செல்வ சேகரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது குறித்துப் பேசுகையில், “இளைஞர்களின் வாழ்க்கையில் தமிழ்நாடு ஆளுநர் விளையாடுகிறார். அவருடைய செயல் ஆளுநர் பதவிக்கு தகுதியில்லாத செயல். தமிழ்நாடு ஆளுநர் நான் அதிகாரத்துடன் இருந்தால் நீட் தேர்வு விலக்குக்கு உறுதியாக ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று சொல்லுவது, ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகி என்பது தெளிவாக காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.
நீட் விலக்கு மசோதா; ஆளுநருக்கு மாணவியின் தந்தை சரமாரி கேள்வி