பூமி கண்காணிப்பிற்கான ரீசாட் செயற்கைக் கோளைச் சுமந்த படி இந்தியாவின் பிஎஸ்எல்சி- சி-46 (PSLV C-46)ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. பூமியைக் கண்காணிப்பதற்கான ரீசாட் 2பி ஆர்1 (RISAT-2B) என்ற புதிய செயற்கைக் கோளை இஸ்ரோ நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 5 மணி 27 நிமிடங்களுக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக் கோளின் உதவியால் இரவிலும், பகலிலும் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நேரத்திலும் பூமியைத் தெளிவாக படம் பிடிக்க முடியும். இதில் அதிநவீன புகைப்பட சாதனம் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரேடார் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பூமியைத் தெளிவாகப் படம் பிடித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப முடியும். இந்தியாவில் முதன் முறையாக ராக்கெட் ஏவப்படுவதைப் பார்க்க ஏவுதளத்தில் பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் இஸ்ரோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்த பின்னர் தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். விண்வெளி தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்வதற்காக பொதுமக்கள் ஏவுதளத்தில் அனுமதிக்கப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேலும் ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்க்க விரும்புவோர்கள் இணையதள முகவரி : https://www.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp சென்று பதிவு செய்து கொள்ளலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்த செயற்கை கோளை தொடர்ந்து சந்திராயன் -2ஐ விண்கலத்தை ஜூலை மாதத்தில் விண்ணில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.