கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்களும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பேரணி நடத்தினார்கள். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தீவைக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று, டெல்லியில் வன்முறைக்கு நடுவே இஸ்லாமியர்கள் மிகுந்த பகுதியில், இஸ்லாமியர்கள் பாதுகாப்போடு இந்துப் பெண் ஒருவரின் திருமணம் நடைபெற்றுள்ளது. தில்லியின் கிழக்கு பகுதியில் வசிக்கும் இந்து பெண்ணான சாவித்திரிக்கு கடந்த 24ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அன்று வன்முறை ஏற்பட்டத்தை அடுத்து அந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இஸ்லாமியர்கள் பாதுகாப்போடு இன்று நடைபெற்ற அந்த திருமணத்தில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டார்கள்.