இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு பொதுமக்களுக்கு உடனடி வாங்கி கடன் வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது.
பண்டிகை காலங்களில் வங்கிகளில் உடனடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனையடுத்து நடைபெற்ற பொதுத்துறை வங்கிகளின் ஆண்டு செயல்பாடு பற்றிய ஆய்வு கூட்டத்தில், அக்டோபர் 3 முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு நாடு முழுவதும் உடனடி கடன் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் இன்று முதல் உடனடி கடன்களை வழங்க உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன் கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகியவை உடனடியாக வழங்கப்பட உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கடன் வழங்கும் முகாம்கள் பற்றிய விவரங்கள் உள்ளூர் வர்த்தக சங்கங்கள், வணிக நிறுவனங்கள், வர்த்தகசபைகள் மூலமும் வியாபாரிகளுக்கும், நுகர்வோருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளியை முன்னிட்டு இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டம் வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.