Skip to main content

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் வெளியான பகீர் தகவல்!

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

information released actor Kalabhavan Mani

 

ஜெமினி, புதிய கீதை, எந்திரன், பாபநாசம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் கலாபவன் மணி. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் மலையா சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் தமிழ் சினிமாவிலும் பிரபலமாகினார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி கேரளாவிலுள்ள சாலக்குடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் மர்மமான முறையில் இறந்திருந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. பிரேத பரிசோதனையில் அவர் உடலில் மெத்தில் மற்றும் எத்தில் ஆல்கஹால் இருந்ததும், க்ளோரோபைரபோஸ் என்ற கிருமிநாசினி இருந்ததாகவும் கூறப்பட்டது.

 

இதன்பின் மத்திய ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் முடிவுகள் வேறாக இருந்ததால் குழப்பம் நீடித்தது. அவர் மதுவில் விஷம் கலந்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகங்களை எழுப்பினர். இதனால் கலாபவன் மணியின் குடும்பத்தார், இதை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, கடந்த 2017-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர். அதன்பின் கேரள உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இந்த விசாரணை இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் 35 பக்கங்களை கொண்ட அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்திருந்தது. அதில், கலாபவன் மணியின் மரணம் கொலையல்ல, அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தியன் காரணமாக ஏற்பட்ட கல்லீரல் நோயால் தான் அவர் மரணத்தை தழுவியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

இந்நிலையில் கேரள ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் நடிகர் கலாபவன் மணி மரணம் குறித்து பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதில், “பீர் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கலாபவன் மணி, தொடர்ந்து அதிகளவு பீர் குடித்ததால், பீரில் இருந்த மெத்தில் ஆல்கஹால் கலாபவன் மணியின் உடலில் அதிகளவு சேர்ந்துள்ளது. மெத்தில் ஆல்கஹால் என்பது டர்பெண்டெயின், பெயிண்ட் அகற்ற பயன்படுத்தக் கூடிய வேதிப்பொருளாகும். தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததே கலாபவன் மணி மரணத்துக்கு காரணமாகும். மரணம் ஏற்பட்ட 2016 ஆண்டு மார்ச் 6 ஆம் தேதியும் கலாபவன் மணி 12 பாட்டில் பீர் குடித்துள்ளார். அதில் மெத்தில் ஆல்கஹால் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பீரில் மிகக்குறைந்த அளவே மெத்தில் ஆல்கஹால் இருந்தாலும், தொடர்ந்து பீர் குடித்ததால் நடிகர் கலாபவன் மணியின் உடலில் அதிகளவு மெத்தில் ஆல்கஹால் சேர்ந்துள்ளது.

 

தீவிர நீரிழிவு நோயாளியான கலாபவன் மணி இதற்காக காலை, மாலை என இரு வேளையும் மாத்திரைகளை உட்கொண்டு வந்தார். இந்த மாத்திரைகள் சாப்பிடும் போதும் பீர் அருந்தியதால் உடலில் வேதிவினை ஏற்பட்டு உடல் கடுமையாக பாதித்துள்ளது. நீரிழிவு நோய், கல்லீரல் பாதிப்பு குறித்தும் யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளார். கல்லீரல் செயலிழந்த நிலையிலும் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை கலாபவன் மணி கைவிடவில்லை. கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும், பீர் குடிப்பதை அவர் நிறுத்தவில்லை” என பகீர் தகவலை தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்