பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் தொடர்ந்துவருகிறது. அண்மையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரீந்தர் சிங்கிற்கும் இடையே நடைபெற்று வந்த மோதலை நிறுத்த, சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸின் தலைவராக்கப்பட்டார்.
இருப்பினும் கோஷ்டி பூசல் தீரவில்லை. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனைத்தொடர்ந்து அவர் கடந்த சனிக்கிழமை (18.09.2021) தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதனையடுத்து காங்கிரஸ் மத்திய தலைமை, சரண்ஜித் சிங் சன்னியை பஞ்சாபின் புதிய முதல்வராக அறிவித்தது. சரண்ஜித் சிங் சன்னி தற்போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும், அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நவ்ஜோத் சிங் சித்துவே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில், பஞ்சாப் காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர் ஹரிஷ் ராவத், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலைக் காங்கிரஸ் சித்துவின் தலைமையின் கீழ் சந்திக்கும் என தெரிவித்துள்ளார். காங்கிரஸ், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை யாருடைய தலைமையின் கீழ் சந்திக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "அதைக் காங்கிரஸ் தலைவர்தான் முடிவு செய்வார். ஆனால் தற்போது சூழ்நிலையைப் பொறுத்தவரை, சித்து தலைவராக உள்ள பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைமையின் கீழ்தான் சட்டமன்றத் தேர்தல் எதிர்கொள்ளப்படும்" என கூறியுள்ளார்.
ஆனால் ஹரிஷ் ராவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு பதிலாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என கருதப்பட்டவருமான சுனில் ஜாகர், "முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்கவுள்ள நாளில், சித்துவின் தலைமையின் கீழ் தேர்தல் எதிர்கொள்ளப்பட்டும் என ராவத் கூறியிருப்பது குழப்பமானது. இது முதல்வரின் அதிகாரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம் என்பதோடு, அவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணத்தையும் ஒன்றுமில்லாமல் செய்யக்கூடும்" என தெரிவித்துள்ளார். இதனால் பஞ்சாப் காங்கிரஸில் கோஷ்டி பூசல் தொடர்வது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
ஏற்கனவே சித்துவை தேச விரோத சக்தி எனவும், அவர் முதல்வராக்கப்படுவதை எதிர்ப்பேன் எனவும் கேப்டன் அமரீந்தர் சிங் கூறியுள்ள நிலையில், சித்துவின் கீழ் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் எதிர்கொள்ளப்படும் என ஹரிஷ் ராவத் கூறியிருப்பது கோஷ்டி பூசலைப் பெரிதாக்கும் என கருதப்படுகிறது.