இந்திய சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இறக்குமதியாளர்களும், வங்கியாளர்களும் அமெரிக்க டாலர்களையே அதிகம் வாங்கி வருகின்றனர். அதேபோல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையும் கடந்த காலங்களில் அதிகரித்துவருவதால் எண்ணெய் நிறுவனங்களும் அமெரிக்க டாலரை அதிகம் வாங்கி வருகின்றன. இதனால் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்து வருகிறது.
இந்தநிலையில் இன்று இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று காலை வணிக நேரம் தொடங்கிய உடனே இந்திய ரூபாயின் மதிப்பு 28 காசுகள் குறைந்து முதல் முறையாக 68 ரூபாய் 89 காசுகள் என்றானது.
அடுத்தசில நிமிடங்களே ரூபாயின் மதிப்பு 21 காசுகள் குறைந்து வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு 69 ரூபாய் என்ற அளவை தாண்டியது. மொத்தமாக இன்று ஒரே நாளில் இந்திய ரூபாய் மதிப்பு 49 காசுகள் சரிந்து 69 ரூபாய் 10 காசுகள் என்ற நிலைக்கு வந்துள்ளது.
இதற்கு முன் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 24 -ஆம் தேதி 68 ரூபாய் 73 காசுகள் என ரூபாயின் மதிப்பு குறைந்து இருந்தது என்பதுதான் மிக குறைந்த அளவாக பார்க்கப்பட்டது.
பணமதிப்பின் வீழ்ச்சி விலைவாசி உயர்வுக்கும், பணவீக்கத்திற்கும் வழிவகுக்கும் என பொருளியல் துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.