Skip to main content

உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகத்தை போலந்துக்கு மாற்ற வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

Indian Ministry of External Affairs decides to shift Indian Embassy in Ukraine to Poland!

 

உக்ரைனில் ரஷ்யப் படைகள் உக்ரனைத் தாக்கி வரும் நிலையில், அங்கிருந்த இந்திய தூதரகத்தை போலந்து நாட்டிற்குத் தற்காலிகமாக மாற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

 

உக்ரைன் நாட்டின் மேற்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, கீவ், லிவிவ் நகரங்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து, வெடிகுண்டு வீசப்படுவதால், பாதுகாப்புக்காக பலர் நிலவறைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்தச் சூழலில் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும், இந்திய தூதரகத்தை பாதுகாப்பு கருதி போலந்து நாட்டிற்குத் தற்காலிகமாக மாற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

 

உக்ரைனில் சிக்கியிருந்த இந்தியர்களும், இந்திய மாணவர்களும் முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து, தற்போது தூதரக அலுவலகத்தில் இருக்கும் இந்தியர்களையும் பாதுகாக்க, இந்திய வெளியுறவுத்துறை முடிவு செய்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரி உட்பட 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். 

 

மேலும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும், அங்கு தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, தூதரகத்தில் பணியாற்றுபவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த முடிவை வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. உக்ரைனில் அடுத்து நிகழ உள்ள சூழலைப் பொறுத்து, இந்த முடிவு மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்