இந்தியாவில் கரோனா அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஏற்கனவே ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்தநிலையில் இந்தியா தற்போது ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி பெற, தடுப்பூசியை உள்நாட்டில் ஆய்வு செய்திருக்க வேண்டும். தற்போது இந்த விதியிலிருந்து வெளிநாட்டில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டு தடுப்பூசிகள், இந்தியாவில் அவரசகால அனுமதி வாங்க இந்தியாவில் ஆய்வு மேற்கொள்ள தேவையில்லை.
தேசிய நிபுணர் குழுவின் ஆலோசனையை ஏற்று மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. உள்நாட்டு பயன்பாடு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்துதல் ஆகியவற்றிற்காக, வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்குவதை விரைவுபடுத்தும் விதமாக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும், வெளிநாட்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளும் முதல் 100 பேர், ஏழு நாட்களுக்கு கண்காணிக்கப்படுவர் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.