இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்தநிலையில் இன்று இந்தியா, 100 கோடி தடுப்பூசி டோஸை செலுத்தி சாதனை படைத்துள்ளது. தடுப்பூசி செலுத்த தொடங்கிய ஒன்பது மாதங்களில் இந்தியா 100 கோடி டோஸ்களை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதன்மூலம், நூறு கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்திய இரண்டாவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. ஏற்கனவே சீனா கடந்த ஜூன் மாதம் 100 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதை முன்னிட்டு, செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவின் சாதனையை குறிக்கும் விதமாக பாடல் ஒன்றையும், ஒலி-ஒளி படத்தையும் வெளியிடுகிறார்.
அதேபோல் இந்தியா 100 கோடியாவது தடுப்பூசியை செலுத்தியவுடன், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மெட்ரோக்களில் அதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் காதியில் நெய்யப்பட்ட நாட்டின் மிகப்பெரிய தேசிய கோடி செங்கோட்டையில் பறக்கவிடப்படுகிறது.