ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ள தலிபான்கள், தங்களது இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான உணவுப் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. தலிபான்களுக்கு முன்னதாகவே அங்கு 80 சதவீத மக்கள் போதுமான உணவு கிடைக்காமல் தவித்த நிலையில், தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பிறகு போதுமான உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்களின் நிலை 93 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக உணவுத் திட்டம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஆப்கானில் நிலவும் உணவுப் பஞ்சத்தைத் தீர்க்க உதவும் வகையில், அந்த நாட்டிற்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை அனுப்ப இந்திய அரசு முடிவு செய்தது. இந்தியாவிலிருந்து தங்கள் நாடு வழியாக ஆப்கானிஸ்தானுக்குப் பொருட்கள் செல்வதற்கு அனுமதி மறுத்து வந்த பாகிஸ்தான், கோதுமையை தங்கள் நாட்டின் வழியாக அனுப்ப அண்மையில் அனுமதியளித்தது.
இதனை தொடர்ந்து முதல்கட்டமாக இன்று, இந்தியாவிலிருந்து 2,500 மெட்ரிக் டன் கோதுமை 50 ஆப்கானிஸ்தான் லாரிகளில் அந்தநாட்டிற்குப் புறப்பட்டுள்ளது. மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதற்காக இந்த கோதுமை உலக உணவுத் திட்ட அமைப்பிடம் அளிக்கப்படவுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை கொண்டு செல்லும் லாரிகளின் பயணத்தை கொடியசைத்துத் துவங்கி வைத்த வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, அடுத்த 2 - 3 மாதங்களில் 50,000 மெட்ரிக் டன் கோதுமைமையும் முழுமையாக ஆப்கானுக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார்.