சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளுக்கும் (ஒபெக்) அதன் கூட்டணி நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்தன.
ஆனால் ஒபெக் நாடுகளும் அதன் கூட்டாளர்களும் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டன. இந்தநிலையில் கடந்த வாரம், கச்சா எண்ணெய் விலையைக் குறைப்பதற்காக தங்களிடம் இருப்பில் உள்ள கச்சா எண்ணைய்யை விடுவிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் என இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வு நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டது.
இந்தச்சூழலில் இந்தியா, தனது அவசரகால தேவைக்காக மூலோபாய இருப்பாக வைத்துள்ள கச்சா எண்ணெய் இருந்து 5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சில நாடுகள் இவ்வாறு தங்கள் இருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்தியா வருங்காலத்தில் மேலும் கச்சா எண்ணெய்யை விடுவிக்கலாம் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா தனது அவசரகால தேவைக்காக, 38 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையின் மூன்று இடங்களில் நிலத்தடியில் சேமித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்தியாவை போல் மேலும் சில நாடுகள் தங்களிடம் இருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை விடுவித்தால் பெட்ரோல்-டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.