உலகம் முழுவதும் லஞ்சம், ஊழல் மலிந்த 180 நாடுகளில் இந்தியா 78- வது இடத்தைப் பிடித்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்தியாவில் கடந்த 12 மாதங்களில் 51 சதவீதம் பேர், லஞ்சம் கொடுத்து, தங்களுக்கான காரியங்களைச் சாதித்துக் கொண்டதாகவும் ஆய்வின்போது ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஊழல், லஞ்சத்திற்கு எதிரான அமைப்பான 'டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் இந்தியா', ஒவ்வோர் ஆண்டும், உலக நாடுகளில் லஞ்சம் ஊழல் அளவு குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான அறிக்கையை அந்த அமைப்பு நவ. 27ம் தேதி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் லஞ்சம், ஊழல் குறித்து கடந்த 12 மாதங்களில், 20 மாநிலங்களைச் சேர்ந்த 248 நகரங்களில் வசிக்கும் 1.90 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தி இருக்கிறது அந்த அமைப்பு. லஞ்ச லாவண்யம் குறித்து பல கலவையான தரவுகள் கிடைத்திருக்கின்றன. அதன்படி, கடந்த 12 மாதங்களில் 51 சதவீத இந்தியர்கள், ஒருமுறையேனும் அரசு மற்றும் சார்பு அமைப்புகளிடம் இருந்து பலன்களைப் பெற லஞ்சம் கொடுத்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இவர்களில் 24 சதவீத இந்தியர்கள், ஒருமுறை அல்லது இருமுறை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும், 24 சதவீதம் பேர் இரண்டுக்கும் மேற்பட்ட முறை லஞ்சம் கொடுத்தே தங்களுக்கான காரியங்களைச் சாதித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் எல்லா துறைகளிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும்கூட, குறிப்பிட்ட மூன்று துறைகளில் லஞ்சமும் ஊழலும் உச்சம் தொட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் இந்தியர்கள். ஊழல் மலிந்த துறைகளில் முதலிடத்தில் இருப்பது, பத்திரப்பதிவுத்துறை. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் காவல்துறையும், உள்ளாட்சித்துறையும் இருக்கின்றன. சொத்துகளை பதிவு செய்யும்போது, லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது என்று 26 சதவீதம் பேர் ஆய்வின்போது தெரிவித்துள்ளனர்.
மேலும், பத்திரப்பதிவுத்துறையில் லஞ்சம் கேட்டுப் பெறுகிறார்கள் என்று 48 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதேபோன்ற குற்றச்சாட்டை அவர்கள், உள்ளாட்சித்துறை மீதும் கூறுகின்றனர். பிறப்பு, இறப்பு சான்றிதழ் முதல் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பெறுவது வரை உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெறும் எந்த ஒரு சேவைக்கம் பணம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாகி விட்டது என்று 44 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். அதேநேரம், முந்தைய ஆண்டைக் காட்டிலும் உள்ளாட்சி அமைப்புகளில் 10 சதவீதம் பேர் லஞ்ச நடமாட்டம் குறைந்திருப்பதாகவும் சொல்கின்றனர்.
இத்துறை இப்படி என்றால், காவல்துறையில் முந்தைய ஆண்டைக் காட்டிலும் லஞ்சம் அதிகரித்துள்ளதாக 11 சதவீத இந்தியர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2018ம் ஆண்டு ஆய்வின்போது 56 சதவீத இந்தியர்கள், இந்தியாவில் லஞ்சம், ஊழல் மலிந்து விட்டதாகச் சொன்ன நிலையில், நடப்பு ஆண்டில் அது 51 சதவீதமாக குறைந்து இருக்கிறது. எனினும், 2017ம் ஆண்டின் புள்ளி விவரத்துடன் (45%) ஒப்பிடுகையில், நடப்பு ஆண்டில் லஞ்சம் 51 சதவீதமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், ஊழல் தடுப்பு சட்டம்&2018என் படி, லஞ்ச குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ஆனாலும், இங்கே ஊழல் ஒரு பெரும் சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.