இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டு மோசமான பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டின. ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவ உபகரணங்களை இந்தியாவிற்கு சர்வதேச நாடுகள் அனுப்பி வைத்தன. அதேபோல் இந்தியாவிற்கு பல்வேறு அமைப்புகளும் உதவின.
இந்தநிலையில் வெளிநாடுகளும், பல்வேறு அமைப்புகளும் இந்தியாவிற்கு அனுப்பிய உதவிகள் குறித்து மத்திய அரசு, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் மத்திய அரசு, வெளிநாடுகளிலிருந்தும், பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெற்று வருகிறது. அவை உடனுக்குடன் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் "மொத்தமாக 15,567 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 15,801 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், 10,950 வென்டிலேட்டர்கள் / பைபாப் கருவிகள், 6.6 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் ஆகியவை ஏப்ரல் 27 ஆம் தேதியிலிருந்து மே 20 ஆம் தேதி வரை சாலை மற்றும் வான் மார்க்கமாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது" என மத்திய அரசு தெரிவித்துள்ளது.