இந்தியர்களின் பணப்பரிமாற்ற முறையில் வேகமாக மாற்றம் ஏற்பட்டுவருவதாக, எஸ் அண்ட் பி ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்வதைவிட, ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன் செயலிகள் மூலமாக செய்வது வேகமாக அதிகரித்துவருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன் செயலிகள் மூலம் செய்யப்பட்ட பணப்பரிமாற்றம் 67% உயர்ந்து 47,800 கோடி டாலர்களாக உள்ளது. நடப்பாண்டில் ஃபோன் செயலிகள் மூலமான பணப்பரிமாற்றம் ஒரு லட்சம் கோடி டாலர்களைத் தொடும் என கணிக்கப்பட்டுள்ளது.
பணப்பரிமாற்றத்திற்கான ஃபோன் செயலிகளில் ஃபோன் பே நிறுவனம் 44% சந்தை பங்குடன் முதல் இடத்தில் உள்ளது. 35% சந்தை பங்குடன் கூகுள் பே நிறுவனம் இரண்டாவது இடத்திலும், 14% சந்தை பங்குடன் பேடிஎம் மூன்றாவது இடத்திலும், 2% சந்தை பங்குடன் அமேசான் பே நான்காவது இடத்திலும், 5% சந்தை பங்குடன் மற்ற செயலிகளும் உள்ளன.
கடந்த 2020ஆம் ஆண்டில் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டு மூலமான பணப்பரிமாற்றம் 14% குறைந்து 17,000 கோடி டாலர்களாகியுள்ளது என்று குறிப்பிடப்பட்டது. கரோனா பொது முடக்கமே ஃபோன் செயலிகள் மூலமாக பணப்பரிமாற்றம் வேகமாக அதிகரிக்க முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
வரும் காலங்களில் ரொக்க பணத்திற்கான தேவை வெகுவாகக் குறைந்துவிடும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.