உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயதுக்குட்பட்ட சிறுமி. இந்த நிலையில், அவர் வசித்து வந்த பகுதிக்கு அடுத்த பகுதியான காசியாபாத் பகுதியில் சில நாட்களுக்கு முன் திருவிழா நடைபெற்றுள்ளது. அந்த திருவிழாவின் ஒரு பகுதியாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.
அந்த கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அந்த சிறுமி அங்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறுமி, வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த காரை மறித்து லிப்ட் கேட்டுள்ளார். இதையடுத்து, காரில் இருந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு லிப்ட் கொடுத்து காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். சிறிது தூரம் கழித்து, அந்த மர்ம நபர்கள் அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள், அந்த சிறுமியை கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையின் அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பாரத் சிங், அனில் மற்றும் சோனு ஆகிய 3 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கேட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.