கடந்த நவம்பர் 26ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. இதில், குடிபோதையில் பயணம் செய்த ஆண் பயணி ஒருவர் பிஸினஸ் கிளாஸில் பயணம் செய்த மூதாட்டியின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
மேலும் இது குறித்து விமானப் பணியாளர்களிடம் தெரிவித்தபோது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த மூதாட்டி ஏர் இந்தியா நிறுவனத்தின் குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு தனக்கு நேர்ந்த அவலத்தைக் கடிதம் மூலம் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்து சுமார் 40 நாட்களுக்கு மேலாகிய நிலையில், தற்போது ஏர் இந்தியா நிறுவனம் அந்த ஆண் பயணிக்கு அடுத்த 30 நாட்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யத் தடை விதித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள், இதேபோன்ற சம்பவம் ஒன்று மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் அரங்கேறியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரிலிருந்து கடந்த 6ஆம் தேதி டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஆண் பயணி ஒருவர், சக பெண் பயணி போர்த்தியிருந்த போர்வையில் குடிபோதையில் சிறுநீர் கழித்துள்ளார். இது விமானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விமானம் தரையிறங்கியவுடன் போலீசார் அந்த ஆண் பயணியைப் பிடித்து விசாரித்தனர். அதில் ஆண் பயணி நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பரஸ்பரம் சமாதானம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.