
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் பலியான சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று காலை ‘ஸ்லாப்’ எதிர்பாராத விதமாக திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மெட்ரோ ரயில் நிலையத்தின் ‘ஸ்லாப்’ இடிந்து விழுந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களும் சேதம் அடைந்துள்ளன.