அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த கூட்டம் இன்று (18.7.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. இன்று மதியம் 12:00 மணிக்குத் தொடங்கிய கூட்டம் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.
இந்நிலையில் அதே நேரம் பாஜக தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் அதற்கான ஆலோசனைக் கூட்டம் தற்போது துவங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து அதிமுக, ஐஜேகே, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கு கொண்டுள்ளன. பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் முடிந்த நிலையில் டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி, புதுவை முதல்வர் ரங்கசாமி, கிருஷ்ணசாமி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் அஜித்பவார், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்குகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் ஏற்கனவே கூட்டணியிலிருந்த புரட்சி பாரதம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படாததால் அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். புரட்சி பாரதம் மட்டுமல்லாது ஏற்கனவே கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிகவிற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. கடந்த தேர்தலில் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் மேற்கொண்ட பிரச்சாரத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதேபோல் அதிமுக ஓபிஎஸ் அணி, டிடிவி.தினகரனின் அமமுக உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.