முறையற்ற தொடர்பிலிருந்து மனைவியை கண்டித்த கணவன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மனைவி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் பூங்கொடிபுரத்தைச் சேர்ந்தவர் ஞானசேகரன். ஆட்டோ டிரைவரான இவர் லூர்துமேரி என்ற பெண்ணுடன் திருமணமாகி வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. கடந்த 29ஆம் தேதி வெளியே சென்ற ஞானசேகரன் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக லூர்துமேரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் ஞானசேகரின் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினார். அதில் ஞானசேகரன் கடைசியாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த செல்வம் என்ற நபரிடம் பேசியது தெரியவந்தது. இதுதொடர்பாக செல்வத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பொழுது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த செல்வம் இறுதியில் ஞானசேகரனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். செல்வத்திற்கும் ஞானசேகரன் மனைவி லூர்துமேரிக்கும் இடையே முறையற்ற தொடர்பு இருந்தது. அதனை ஞானசேகரன் கண்டித்து வந்தார். இந்த நிலையில் கணவனை கொலை செய்ய மனைவி லூர்துமேரியும் செல்வமும் திட்டமிட்டனர்.
திட்டத்தின்படி மது அருந்தலாம் எனக் கூறி இடையர்பாளையம் காட்டுப்பகுதிக்கு ஞானசேகரனை அழைத்துச் சென்று செல்வம் போதையிலிருந்த அவரை கத்தியால் வெட்டி கொலை செய்து உறவினர் பாலாஜி என்பவரின் உதவியுடன் அங்கேயே குழி தோண்டி புதைத்துள்ளார். தற்பொழுது இந்த சம்பவத்தில் கொலையான ஞானசேகரனின் மனைவி லூர்துமேரி, அவருடன் முறையற்ற தொடர்பிலிருந்த செல்வம் மற்றும் பாலாஜி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.