இந்தியாவில் கடந்த 700 ஆண்டுகளாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரின் விருப்ப உணவாக இருக்கிறது இட்லி. இன்னும் சொல்லப்போனால் இட்லி நமது பாரம்பரியமான உணவு என்று தமிழர்கள் சொல்லும் அளவுக்கு ரொம்ப பிரபலமாக இருக்கிறது. ஆனால் இட்லியின் தாயகம் இந்தோனேஷியா என்றும், அதனை அங்கு ‘கெட்லி’ என்று அழைக்கப்பட்டதாகவும், காலப்போக்கில் மருவி ‘இட்லி’ என மாறியதாகத் தனி வரலாறும் உண்டு. இட்லியின் பிறப்பிடம் இந்தோனேஷியா என்றாலும், பெரும்பாலான இந்திய உணவகங்களில் இன்றளவும் சாப்பாட்டுப் பிரியர்களை ஆவியுடன் வரவேற்பது இட்லி பாத்திரம் தான். அதே போன்று உணவகங்களில் முதலில் தீர்ந்து போகும் உணவும் இட்லிதான்.
இந்நிலையில் இந்தியாவின் சிலிக்கான் வேலி என அறியப்படும் பெங்களூரில் 24 மணிநேரமும் இட்லி கிடைக்கும் வகையில் ஏ.டி.எம் மெஷின் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ப்ரெஷப் ரோபோட்டிக்ஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தானியங்கி இட்லி தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஏ.டி.எம் மெஷினில் இருக்கும் க்யூ ஆர் குறீட்டை மொபைலில் ஸ்கேன் செய்து தேவையான இட்லி மற்றும் சட்னிகளை தேர்வு செய்து பணம் செலுத்தினால் 1 நிமிடத்தில் சுடச் சுட இட்லி கிடைத்து விடுகிறது.
தொழிலதிபர்களான ஷரன் ஹிரேமத், சுரேஷ் சந்திரசேகரன் உருவாக்கியுள்ள இந்த இட்லி ஏ.டி.எம் மெஷின் 12 நிமிடத்தில் 72 இட்லிகளை சுட்டுத் தருமாம். மேலும் அந்த இயந்திரத்தில் இட்லிக்குத் தேவையான சட்னி மற்றும் பொடியை நாமே தேர்வு செய்யும் வசதியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இட்லி மெஷின் வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொழிலதிபரான ஷரன் ஹிரேமத், கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்த தனது மகளுக்கு இரவில் இட்லி வாங்குவதற்கு தேடி அலைந்தும் கிடைக்காததால், அதன் தாக்கத்தினால்தான் 24 மணிநேரமும் இட்லி கிடைக்கும் வகையில் இயந்திரத்தை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். பெங்களூரில் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இட்லி ஏ.டி.எம் மெஷினுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாகவும் விரைவில் மற்ற இடங்களிலும் இந்த மெஷின் வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முதலில் ஏ.டி.எம் -ல் பணம் வந்தது. அதனையே நாம் வியப்புடன் பார்த்துகொண்டிருக்க., அடுத்ததாக தண்ணீர் வந்தது. தற்போது இட்லி வந்துள்ளது. இன்னும் என்னவெல்லாம் வருமோ, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.